ஈ.பி.டி.பியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரைத் திருக்கோவில் பிரதேச சபையில் ஆதரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பொத்துவில் பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரித்து அவரைத் தவிசாளராக்கியது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 5 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 4 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுயேச்சைக் குழு, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலா ஒருவருமாக மொத்தமாக பொத்துவில் பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.சதக்கத்துல்லாஹ் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டன.
பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்த வாஸித்துக்கு 10 வாக்குகளும், மக்கள் காங்கிரஸ் முன்மொழிந்த சதக்கத்துல்லாவிற்கு 8 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுயேச்சைக் குழு என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கின. மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் பெறும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர். எம்.எஸ்.அப்துல் வாஸித் தவிசாளராக தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து புதிய தவிசாளரின் தலைமையில் பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. பிரதித் தவிசாளர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஏ.எம்.அப்துல் மஜீத் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பெருமாள் பார்த்திபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. பார்த்திபன் 10 வாக்குகளையும், அப்துல் மஜீத் 9 வாக்குகளையும் பெற்றனர். இதன் காரணமாக அதிக வாக்குகளை பெற்ற பார்த்திபன் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.