ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் இரவு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இடம்பெற்றதாகவும், ஜனாதிபதி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழுமையான ஆதரவை பிரதமருக்கு வழங்குவதாக தெரிவித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்க தரப்பில் உள்ள அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா மற்றும் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோர் இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்தனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்ததாக கூறப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறு யாருக்கும் தெரியாமல் சந்திப்பு நடாத்த முடியாது. குறைந்தது ஊடகங்களின் காதுகளுக்கு அது எட்டாமல் இருக்க மாட்டாது எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.