பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தால், நல்லிணக்க அரசாங்கம் முடிவிற்கு வரும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நேற்று இரவு சந்திப்பொன்றை நடத்தி, நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வி அடைய செய்வது தொடர்பில் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது.
ஊடகம் ஒன்றில் நேற்று இரவு இந்த செய்தி வெளியாகியிருந்தது. பின்னர் குறிப்பிட்ட அந்த செய்தி அந்த ஊடகத்தின் இணைய தளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைய செய்யப்பட வேண்டுமானால் அதனை நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும்”என கூறினார்.