சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை – றோயல் கல்லூரியில் இடம்பெற்ற மாவட்ட கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “நாட்டின் அரசியல் அமைப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ள நிறுவனக் கட்டமைப்பில் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்புள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அதன்மூலம் பாதிக்கப்படுவது மக்களேயாவர்.
பிள்ளைகளின் கல்வி அறிவை மேம்படுத்தவும் ஒழுக்கப் பண்பாடான இளம் தலைமுறையை கட்டியெழுப்பவும் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக இதனை குறிப்பிட முடியும்” எனத் தெரிவித்தார்.
இதன்போது கல்வி அதிகாரிகள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களினால் மாவட்டத்தின் கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் இங்கு முன் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.