அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அப் பகுதி மக்கள் கையெழுத்திட்டு மாவட்டச் செயலரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்தனர்.
மாவீரர் துயிலும் இல்லக் காணியில் ஒரு ஏக்கர் காணி ஒருவரால் வாங்கப்பட்டு, மேற்கொண்டு வரும் அபிவிருத்திகள் , இராணுவம் மேந்கொள்ளும் பயிர்ச்செய்கையை நிறுத்தி, இராணுவம் எமது பிள்ளைகளுக்கு மேல் கிரிகட் விளையாடுவதை நிறுத்துமாறும், மனுவில் கோரப்பட்டுள்ளது.
துயிலும் இல்லக் காணி 9 ஏக்கரையும் மீட்டு இம்முறை மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற ஏற்பாடு செய்து தாருங்கள் என சுமார் 600 இற்கும் மேற்பட்ட உறவுகள் கையெழுத்திட்டு மனுவைக் கையளித்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களில் உடல்கள் புதைக்கப்பட்ட அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்கிறது என்றும் இதனை இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக நோட்டிஸ் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே துயிலும் இல்லத்தில் தமது பிள்ளைகள், மற்றும் உறவுகளை புதைத்த மக்கள் சிலர் சுமார் 600 இற்கும் மேற்பட்டவா்களின் கையொப்பங்கள் சேகரித்து மனுவை மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.
மாவீரர் துயிலும் இல்லக் காணி ஒன்பது ஏக்கரில் ஒரு ஏக்கர் காணியை ஒருவர் பெற்று அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மிகுதி காணியில் இராணுவம் பப்பாசிச் செய்கை மேற்கொள்வதோடு விவசாயம் செய்கிறார்கள், எமது உறவுகளுக்கு மேல் நின்று கிரிக்கட் விளையாடுகிறார்கள்.
மற்றுமொரு பகுதியில் கன்ரின் நடத்துகிறார்கள் இவற்றை எல்லாம் நிறுத்தி எமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த காணியை மீட்டுத்தாருங்கள் என்று அவர்கள் கோரினர்.
கடந்த வருடம் அனைத்து இடங்களிலும் மாவீரர் தினம் கொண்டாடபட்டபோதும் நாம் வீதியில் எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினோம்.
இம்முறை மாவீரர் நாளுக்கு முன்னம் எமது துயிலும் இல்லக் காணியை மீட்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த ஆவன செய்யுமாறு கோரினர்.
இதுதொடர்பில் உரியவர்களிடம் தெரிவிப்பதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார். அத்தோடு இந்த கடிதத்தின் பிரதிகள் அரச தலைவர், மனித உரிமைகள் பேரவை, ஜெனிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர்.