காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
தமிழக விவசாயிகளினால் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, டெல்லி விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், இதை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து கட்சியினரை ஒன்றிணைத்து, பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்” என குரல் எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விவசாயிகளின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டு நடவடிக்கையெடுக்க பிரதமரும் ஜனாதிபதியும் முன்வரும் வரை, பிரதமரின் வீடு மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துனர்.