கண்டியில் அண்மையில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரியெனத் தெரிவிக்கப்படும் மஹசொன் படையணி எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள கும்பலையும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.
பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டு, அனுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமித் குழுவையே கடந்த 24 ஆம் திகதி ஞானசார தேரர் உட்பட தேரர்கள் குழுவினர் நேரில் சென்று சந்தித்து சுகதுக்கம் விசாரித்துள்ளனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்களின் உயிர் உடைமைகளை ஈவிரக்கமின்றி அனைவரின் கண்னெதிரே அழித்தொழித்த தீவிரவாத சம்பவத்தின் பின்னால் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் அமித் வீரசிங்க என்பவர் தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று சென்று சுக துக்கம் விசாரித்துள்ளனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவரது காரியாலயத்திலிருந்து பெற்றோல் குண்டுகள் மற்றும் இனக் கலவரத்துக்குக் காரணமான பல்வேறு தடயங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேர தெரிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற சட்டத்தரணிகளின் 44 ஆவது மாநாட்டில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதியாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாகிஸ்தான் விஜயத்தில், பாகிஸ்தான் பிரதமரிடமும் கண்டி கலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற மாட்டாது எனவும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.