பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எவருக்கும் அரசாங்கத்தில் இருக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்தவித சிரமமும் இன்றி அரசாங்கம் வெற்றிகொள்ளும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடியதாகவும் இதன் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுள்ள அமைச்சர்கள் எவரும் எந்தவித கருத்தும் எதிராக தெரிவிக்க வில்லையெனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவ்வாறு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், அமைச்சரவையில் அது குறித்து பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறில்லாமல், வெளியில் போய் கருத்துத் தெரிவிப்பது சிறந்த பண்பல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்க தரப்பிலுள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தவகையில், காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, அரச முகாமைத்துவம் மற்றும் நிருவாக பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, துறைமுகங்கள் பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் அரசாங்க தரப்பிலுள்ள ஸ்ரீ ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரே இந்த பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் ஆவார்.
இப்பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தால், இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க தரப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.