உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமான ‘சுடான்’ வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவிலுள்ள ‘ஒல் பெஜெட்டா’ வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
உலகில் வெள்ளை காண்டாமிருக்காங்க மூன்றே மூன்று மட்டும் தன உள்ளது. அவற்றுள் ஒரே ஆண் காண்டாமிருகமான ‘சுடான்’ கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் ‘ஒல் பெஜெட்டா’ எனும் விலங்குகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டமிருகம் இறந்துவிட்டது. 45 வயதான சுடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலையில் சரிவு காணப்பட்டது.
சுடானுக்கு வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகள் இருந்தன. தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் நிலைமை மிக மோசமாகியது. அதனால் எழுந்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக சுடானை உயிருடன் வைக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு ஆகியவற்றுடன் வசிந்து வந்தது. இந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.
சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.