முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட நச்சு வேதிப்பொருள் தாக்குதல் பற்றி ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனில் சாலிஸ்பரி என்ற இடத்தில் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவாளி செர்கே ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் இருவரும் மயங்கி கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவில் முதலில் சென்றவரும் மயங்கி விழுந்தார். பின்னர் உஷாரான மற்ற போலீஸார் பாதுகாப்பு கவசங்களை அணிந்து மயங்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று பிரிட்டன் பிரதமர் தெராசா மே பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டனில் உளவு வேலை பார்க்கும் 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்விகாரத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மற்ற நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் விளக்கம் கோரியுள்ளதை வரவேற்பதாக குறிப்பிட்டார். இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். நச்சு வேதிப்பொருள் தாக்குதலில் ரஷி்யாவின் சதி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இது போன்ற கொடிய சம்பவங்கள் இனி நடைபெற கூடாது என வலியுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பதிலடியாக பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம் என ரஷ்யா கூறியுள்ளது. நச்சு வேதிப்போருள் தாக்குதலில் ரஷ்யாவிற்கு தொடர்பு இல்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரி செர்கேய், ஐரோப்பாவில் இருந்து கொண்டு சொந்த நாட்டின் தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்தார் என்பது பழைய புகார். இதனார் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் விடுதலைக்கு பின்னர் பிரிட்டனில் குடியேறிவிட்ட நிலையில், அவர் மற்றும் மகள் இருவர் மீதும் ‘நோவிசோக்’ ரசாயன விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது