கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோவதில்லை எனவும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இதனை தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆகையினால் இந்த வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதற்கான புதிய செயற்திட்டமொன்றினை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இதன்பொருட்டு அரசாங்கமும், நாட்டு மக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.
தேசிய ஒற்றுமையை இல்லாது செய்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தனிப்பட்ட நபர்களின் தன்மானத்திற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றை இல்லாதுசெய்து சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அலுவலர்கள், வர்த்தகர்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்
தொழில்புரிபவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றினர்.
ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டின் கீர்த்தியை பாதுகாத்து நாட்டிற்காக
நிறைவேற்றும் செயற்பணிகளையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
தமது துறைகளில் பணியாற்றும்போது தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை இதன்போது
ஜனாதிபதி தெரிவித்ததுடன், அவற்றை தீர்த்து வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற
உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.