கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனத் தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்க் கட்சியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கட்சி உறுப்புரிமையை தடை செய்வதற்கான பிரேரணையொன்றை எதிர்வரும் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாக அதன் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இனவாத “லேபல்” ஒட்டப்படுவதற்கு யாருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி குறித்த இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு ஸ்ரீ ல.சு.கட்சி சார்பாக ஜனாதிபதியை கோரவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.