இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு, வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவியை நாடியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் திருமதி அனந்தி சசிதரன் போட்டியிட்டிருந்தார். இவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்படுவதால் அவரது மாகாணசபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படலாம். இதனைத் தடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை, திருமதி அனந்தி சசிதரன் நாடியுள்ளார்.
பதவியைக் காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்று தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் திருமதி அனந்தி சசிதரனின் கருத்தை அறிவதற்காக அவரது அலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை.