வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர்.
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கல்லாறுப் பாலத்துக்கு அருகில் மாலை 4 மணி அளவில் விபத்து இடம்பெற்றது. நீர் கொழும்புப் பகுதியில் இருந்து மன்னார் மடு கோயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வானும், மெனிக் பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தூக்கிவீசப்பட்டனர். கயாஸ் வான் வீதியோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்் சென்ற ஏ.நவராயா (வயது 33) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர், வாகனத்தின் சாரதி மற்றும் வானில் இருந்த இரு பெண்கள் என மொத்தமாக 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.இதில் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்து வந்த மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துச் சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.