இலங்கையில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடை இன்று நீக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கண்டி – திகனயில் ஏற்பட்ட வன்முறைகள் ஒவ்வொரு பிரதேசங்களாகப் படர்ந்து செல்ல முகநூல், புலனம் (வட்சப்), வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே காரணம் என்று அரச புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்த மறுகணமே இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது நேற்று முன்தினம் முதல் தடைவிதிக்கப்பட்டது.
அரசின் தடையை மீறி பலர் சட்டவிரோதமான முறையில் முகநூல் கணக்குகளுக்குள் உட்புகுந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏனைய செயலிகளையும் சிலர் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு பயன்படுத்தியர்களை இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் எனவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாகத் தடைசெய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று துறைசார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.