வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவிகள் 110 பேரை தேடும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள டப்ஸி நகரில் பாடசாலை மாணவிகளும் ஆசிரியர்களும் தங்கியிருந்த விடுதியொன்றின் மீது கடந்த வாரம் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது, விடுதியில் தங்கியிருந்த மாணவிகளும் ஆசிரியர்களும் இவர்களின் தாக்குதலிலிருந்து தப்பி பற்றைக்குள் மறைந்திருந்த வேளையில் மாணவிகள் காணாமல் போயினர். காணாமல் போன மாணவிகளில் 76 பேர் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் 110 மாணவிகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவர்களைத் தேடுவதற்காக மேலதிக படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், விமானங்கள் மூலமாகவும் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரத்துக்கு கவலை தெரிவித்துள்ள நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, காணாமல் போன மாணவிகளின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, கடந்த 2014ஆம் ஆண்டு நைஜீரியாவில் 270க்கும் மேற்பட்ட மாணவிகள் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்ட நிலையில், 100 பேர் தொடர்பாக இன்னும் தகவல் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.