இன்று ஆரம்பமாகும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் ஒரு குழு பங்குபற்றுவது என்று கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கிடைக்கும் நிதி ஒழுங்குகளைப் பொறுத்தே, அந்தக் குழுவில் எத்தனை பேர் இடம்பெறுவார்கள் என்று தீர்மானிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-,
ஜெனிவாக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத் தொடர்பில் எமது கட்சி சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பலர் கேட்டார்கள். இதற்கு அமைவாக எமது கட்சி சார்பில் ஒரு குழு கலந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த விடயங்களை நானே கையாளவுள்ளேன். எமது கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம்மா இந்தக் குழுவில் முதன்மைப்படுத்தப்படுவார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தன்னையும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாம் இணக்கம் தெரிவித்தோம். கிடைக்கும் நிதியைப் பொறுத்தே எத்தனை பேர் கொண்ட குழு என்பது இறுதி செய்யப்படும்.
அங்கு இடம்பெறும் பக்க நிகழ்வுகள், எமக்கு பேசக் கிடைக்கும் சந்தர்பங்கள் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்தே, எப்போது செல்வது என்பது தீர்மானிக்கப்படும் – என்றார்.