உயர் நீதிமன்றத்தின் விளக்கம் வரும் வரையில் நாட்டின் அரசியல் ஸ்தீரத் தன்மையை பேணுவதற்காக தேசிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளையடுத்தே பாராளுமன்றத்திற்கு நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் எவரும் வருகை தரவில்லையென பிரதி சபாநாயகரும் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்திலிருந்து நீங்குவதற்கு முடியுமா? என வினவியுள்ளனர். இதற்கு ஜனாதிபதி அரசியல் யாப்பு தொடர்பில் விளக்கம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டது. சட்ட மாஅதிபர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்திடம் விளக்கத்தை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.
நேற்று (19) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவகாசம் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். அதன் பிரகாரமே நேற்று ஐ.ம.சு.மு.யின் உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்க வில்லை.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் தாம் ஓரணியாக நின்று ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐ.ம.சு.மு. யில் அரசாங்கத்துடன் உள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர். இதனாலேயே நேற்று சபைக்கு அவர்கள் சமூகமளிக்க வில்லையெனவும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.