யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டு ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
அத்துடன், சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் கட்டுடைப் பகுதியைச் சேர்ந்த த. இரத்தினதேவி என்ற 74 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டியை மூன்று நாள்களாகக் காணவில்லை என்று அயலவர்கள் இன்று முற்பகல் தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போதே மூதாட்டி சடலமாகக் காணப்பட்டுள்ளதை அவதானித்த அயலவர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.