ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பான கடிதத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த அதிரடி தீர்மானத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெறுமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது என ஒரு தரப்பினர் தெரிவிக்கும் அதேவேளை, தேசிய அரசாங்கத்தை களைந்து புதிய அமைச்சரவையை உருவாக்கும் போது புதிய பிரதமரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக மற்றுமொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் ஒரு பரபரப்பான அரசியல் அரங்கேற்றம் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், இறுதி முடிவு என்னவாக இருக்க போகின்றது என்ற சந்தேகத்தில் நாட்டு மக்களும் உலக நாடுகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.