ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறும் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமையை வலிறுயுத்திய இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றுக்கு தமிழ் மக்கள் மத்தியில் கையெழுத்துக்களைத் திரட்டவும் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறும் விடையத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அவ்வாறு இல்லாவிட்டால் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றையாவது அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.