பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி செய்தவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. மும்பை மாநகரில் பரோடியில் உள்ள வங்கி கிளையில் பிரபல நகை கடை நிறுவனங்களின் பங்குதாரர்களான நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி உள்ளிட்மடார் 11,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இதனை பங்கு பரிவர்த்தனை வாரியமான செபிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 2-வது நாளாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள நிரவ்மோடியின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரவ்மோடியும் அவரது பங்குதாரர்களும் 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நிரவ்மோடி வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்? பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி மோசடி செய்த நிரவ்மோடி வெளிநாடுகளுக்கு தப்பியிருக்கலாம் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
நிரவ்மோடி வீட்டை சோதனையிடச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மோசடியில் அலகாபாத், ஆக்ஸிஸ் உள்ளிட்ட சில வங்கிளுக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வங்கி உத்தரவாதத்தின் பேரில் வெளிநாடுகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் தெரிவித்திருந்தது.