யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம், கூட்டமைப்பு கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்கள் சிலர் இணைந்து இந்தக் கடிதத்தை கையளித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இ.ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் முன்னாள் நாடாளுடமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலுக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கட்சிக்குள் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
தற்போது கூட்டமைப்பு யாழ்ப்பாண மாநகர சபையில் ஆட்சி அமைத்தால், மேயர் பதவி சொலமன் சிறிலுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரும் கடிதம் கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சொலமன் சிறிலை மேயராக்க வேண்டும் என்று செயற்படும் ஒரு குழுவினர், யாழ்ப்பாண மாநகர சபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது.யாழ்ப்பாண மாநகர சபையில் வெற்றி பெற்ற வட்டார வேட்பாளர்கள் சிலரே இவ்வாறு பேச்சு நடத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.