உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் தான் “கிங்மேக்கர்கள்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சிறிதர் தியேட்டரில் யாழ்ப்பாண நகர வர்த்தகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள முக்கியமான சில வர்த்தகர்கள் (பத்துக்கும் குறைவானோர்) ஈ.பி.டி.பியின் செயலர் டக்ளஸ் தேவானந்தாவால், சிறிதர் தியேட்டருக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகர வர்த்தகர்கள் யாழ்ப்பாண நகரத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்ட முன்மொழிவுகளை தமக்குச் சமர்பிக்க வேண்டும் என்று இந்தச் சந்திப்பில், டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பவர்களிடம் அந்தத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்பித்து தாம் ஆதரவு வழங்குவோம் என்றும், அதனைச் செயற்படுத்தாத பட்சத்தில் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்றும் வர்த்தகர்களிடம் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரிய தலைவர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கெட்டிக்காரன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், சம்பந்தன், சுமந்திரனை வெளியேற்றினால் இணையத் தயார் என்று தெரிவித்தமை தவறானது என்றும் சந்திப்பில் கூறியுள்ளார்.