நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையைச் சீர்செய்ய தலைமை அமைச்சர் பதவியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் ஏற்கப் போவதில்லை. அரச உயர் மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நான் ஏற்கப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படவேண்டும்.
அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கலாம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்வதே இப்போதைக்குச் சிறந்த வழி. இவ்வாறு நேற்றுக் கருத்து வெளியிட்டார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
அவர் தெரிவித்ததாவது:
தேர்தல் வெற்றியையடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் மூத்த அமைச்சர்கள் என்னுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
அவர்களில் பலர் நான் அழைத்தால் என்னுடன் இணைந்து செயற்படவும் தயார். ஆனால், மக்களை இந்தக் காட்டாட்சியிலிருந்து மீட்பதே எனது நோக்கம்.
தலைமை அமைச்சர் பதவியோ அல்லது கட்சித் தலைமைப் பதவியோ எனக்குக் கிடைத்தால் அது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. கிராமங்கள் எனது கட்டுப்பாட்டில் வந்தமைபோன்று முழு நாடும் இவர்களின் அடிமைப்பிடியிலிருந்து மீண்டு என்னிடம் வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தேர்தலொன்று வேண்டும்.
அந்தத் தேர்தலில் எங்களுக்குக் கிடைக்கும் மக்கள் ஆணையை கொண்டு அடுத்த கட்டத்துக்கு நாங்கள் செல்லலாம். பதவி ஆசைகள் காட்டி எங்களுக்குக் கயிறு கொடுக்க நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது – என்றார்.