வரலாறு முழுவதும் தோற்றுக் கொண்டிருக்கிறோம், ஏமாற்றப்படுகிறோம் என்ற நிலையை மாற்றியமைத்து, தமிழ் மக்களுக்கான புதியதோர் வரலாற்றை நாம் உருவாக்குவோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”கிளிநொச்சி மாவட்டம் போரினால் முழுதாகவே அழிந்த மாவட்டமாகும். இங்கே உள்ள மக்கள் அனைவரும் யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். மீள்குடியேற்றத்திற்குப் பிறகு கிளிநொச்சி மாவட்டத்தை முடிந்த அளவுக்கு மீள் நிலைப்படுத்திக் கட்டியெழுப்புவதற்காக மக்களுடன் இணைந்து கடந்த காலத்தில் பாடுபட்டிருக்கிறோம்.
வடக்குக் கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை முன்னிலை மாவட்டமாகக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதேவேளை எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் இலட்சியத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்திலும் நாம் விட்டுக் கொடுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகிறோம்.
அண்மைக் காலத்தில் மக்கள் அரசியல் ரீதியாகக் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசியல் தீர்வின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல தரப்பினரும் ஒவ்வொரு விதமாகப் பேசி வருவதால் மக்கள் குழப்படைந்துள்ளனர்.
இந்தக் குழப்பமான நிலையை நாம் எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம். போராட்டத்தில் பெரும் தியாகங்களைச் செய்த எமது மக்கள் இன்று இவ்வாறான குழப்பங்களுக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” எனத் தெரிவித்தார்.