லண்டனிலுள்ள இலங்கைத்தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மீண்டும் ராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளதை பிரித்தானிய அரசாங்கம் ஏற்கக் கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பணியாற்ற அனுமதித்தமையானது, சர்வதேச சட்டத்திடமிருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கும் செயற்பாடு என்றும் குறித்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரத் தினத்தின் போது லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்திருந்தார்.
இதனை சமூக ஊடகத்தின் மூலமாக மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டித்து விமர்சித்ததையடுத்து பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க இடைநிறுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
எனினும், பிரிகேடியர் பிரியங்க லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியை மீளப் பொறுப்பேற்பதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.