பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இதில் ஆயுதங்கள் வாங்கக்கூடாது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா இந்த நிதியுதவியை அளித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவாயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 3.3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் விளங்கி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
இவரது தொடர் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பலகோடி நிதியுதவியை பாகிஸ்தான் இழக்கும். இந்த நிதியை அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு செலவழிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாகிஸ்தான், அமெரிக்காவின் நிதியை தீவிரவாதிகளுக்கு திருப்பி விட்டுவருவதாக குற்றம் சாட்டினர்.
தெற்கு கரோலினாவை சேர்ந்த மார்க் சான்போர்டு மற்றும் கென்டக்கியை சேர்ந்த தாமஸ் மாஸ்ஸி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து பேசிய மாஸ்ஸி கூறுகையில் “தீவிரவாதிகளுக்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்கக்கூடாது.
தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதா மூலம் வெளிநாடுகளுக்கு அளித்துவந்த இந்த நிதியை அமெரிக்காவின் சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.