தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் தேசிய கைத்தொழில் துறையை முதன்மைப்படுத்திய கொள்கையின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவேண்டுமாயின் நாட்டிலுள்ள வளங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதும் அந்த வளங்களைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் .
நேற்று (02) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘பாதணிகள் மற்றும் தோல்பொருட்கள் கண்காட்சி 2018’ ஐ திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு அவசியமானவை என்பதைப் போலவே அவை அனைத்தையும் நாம் எமது தேசிய கைத்தொழில்துறையைப் பாதுகாக்கும் வகையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு முதலீடொன்றின் மூலம் தேசிய கைத்தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அல்லது அக்கைத்தொழில்துறை பலவீனப்படுமாயின் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில் நாட்டின் தேசிய கைத்தொழில்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை குறித்து ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதனாலேயே எமது ஏற்றுமதிச் சந்தையில் கடந்த 15, 20 வருட காலப்பகுதியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உருவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதார பின்னடைவு மற்றும் வறுமை நிலைக்குத் தீர்வுகளைக் கண்டறியும்போது அனைத்து தேசிய கைத்தொழில் துறைகளையும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிகாட்டிய ஜனாதிபதி, தேசிய கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வலுவூட்டுவதற்கும் வளங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைத்தொழில்துறையை முன்னெடுக்கின்றபோது அவர்கள் முகங்கொடுக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் கொள்கை ரீதியாக தலையிடும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் பாதணிகள் மற்றும் தோல்பொருள் கைத்தொழில்துறையை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதித் துறையில் ஈடுபடும் இயலுமையுள்ள திறமையான உற்பத்தியாளர்களை இனங்கண்டு அவர்களை அத்துறையில் ஈடுபடுத்தும் நோக்குடன் பாதணிகள் மற்றும் தோல்பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம், கைத்தொழில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து இக்கண்காட்சியை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றது.
10 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் நாட்டின் அனைத்து முன்னணி பாதணி மற்றும் தோல்பொருள் உற்பத்தியாளர்கள் பங்குபற்றுவதுடன், 230 கண்காட்சிக் கூடங்களைக் கொண்ட இக்கண்காட்சியில் மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கண்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் விநியோகத்தர்களும் பங்குபற்றுவதுடன் தேசிய தோல் பொருள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் நவீன தொழிநுட்பக்கருவிகளும் இங்கு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சி முற்பகல் 10 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
கைத்தொழில், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேரசிங்க, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க, இலங்கை பாதணிகள் தோல் பொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜீ. நிமலசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.