மக்கள் பிரதிநிதியொருவர் பொதுச் சொத்து மோசடி செய்தமை உறுதியாகி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இல்லாமல் போகின்றது என்பதைக் கூட விளங்காமல் கம்மம்பில கருத்து வெளியிட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை பறிக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள கருத்துக்கள் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இப்படியானவர்களுக்கு 7 ஆண்டுகள் அல்ல. வாக்குக் கேட்கவோ, பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்கவோ முடியாதவாறு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் மிகவும் காத்திரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரையில் 1135 பக்கங்களையும் தான் வாசித்துப் பார்த்ததாகவும், அதில் எந்தவொரு இடத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை பறிக்கப்படுவது பற்றி பரிந்துரைக்கப்பட்ட ஒரு வசனம் தானும் காணப்படவில்லையென நேற்று (30) இரத்தினபுரி மாவட்டத்தில் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.