ஏமன் தலைநகர் ஏடனில் பிரிவினைவாதிகள் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதால், அங்கு போர் வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் கடும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
அதிபர் அபேட்ரபோ மன்சூர் ஹாடி அரசை வெளியேற்றிய ஷியா புரட்சிப் படை, தலைநகர் சனா உள்ளிட்ட சில நகரங்களை கைவசப்படுத்தியது. இதனால், ஏமனின் தலைநகராக ஏடன் செயல்பட்டு வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை ஒடுக்க, அதிபர் மன்சூர் ஹாடிக்கு சவுதி அரேபியா மற்றும் ஏமன் பிரிவினைாவதிகள் ஆதரவு தந்தனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக ஏமன் பிரிவினைவாதிகளும், அரசுக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏடன் ஆளுநர் அய்டரோஸ் அல் ஜோபெய்தியை அதிபர் ஹாடி பதவி நீக்கம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜோபெய்தி தனி பேரவை ஒன்றை அமைத்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்.
அந்த பேரவை, பிரதமர் அகமது பின் தாகர் அமைச்சரவையை கலைத்து மாற்றம் செய்ய அதிபர் ஹாடிக்கு ஒருவார கால அவகாசம் அளித்திருந்தது.இந்த கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், ஜோபெய்தியின் பேரவையினர் ஏடனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஏமன் பிரிவினைவாதிகள் நகருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், ஏமன் பிரிவினைவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே நேற்று முன்தினம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
ஏமன் பிரிவினைவாதிகள் படை தொடர்ந்து முன்னேறி அதிபர் மாளிகையை ஒட்டிய 2 சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ராணுவ முகாமையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர முயன்றன.
இதன் காரணமாக, சவுதி அரேபியா தலைமையிலான ஏமன் அரசு படைகளுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆதரவு பெற்ற ஏமன் பிரிவினைவாதிகள் படைக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு முதல் கடும் போர் மூண்டுள்ளது. ஏடன் நகரின் சாலைகளில் குண்டு சத்தங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றன.
இதுவரை 3 பொதுமக்கள் உட்பட 15 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஏராளமான பிரிவினைவாதிகள் படையினர் மரிப், அப்யான் மாகாணங்களில் இருந்து ஏடன் நோக்கி முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் ஏமனில் உச்சகட்ட பீதி நிலவி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் உள்நாட்டு போரில் 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் கண்டனம்ஏமன் பிரதமர் அகமது பின் தாகர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பிரிவினைவாதிகளின் ராணுவ புரட்சி முயற்சி, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், சட்டத்திற்கும் எதிரானது.
தற்போது நடந்து வரும் சம்பவம் மிகவும் அபாயகரமானது. பாதுகாப்பையும், நாட்டின் நிலைத்தன்மை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கக் கூடியது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் புரிந்த குற்றத்திற்கும், தற்போது நடந்து வரும் தவறான சம்பவத்திற்கும் எந்த வித்தியாசமுமில்லை’’ என்றார்.