சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் இந்தியாவின் ஆட்சேபணைகள் குறித்து பேசுவதற்கு தயாராக உள்ளோம்’ என, சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் முதலீட்டில், சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் இருந்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் உள்ள குவாடார் துறைமுகத்தை இணைக்கும் வகையில், சீனா-பாக்., பொருளாதார பாதை திட்டத்தின் கீழ், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால், அதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீனாவுக்கான இந்தியத் தூதர், கவுதம் பாம்பேவாலா, சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்த பொருளாதார பாதை திட்டத்தில் இந்தியாவின் கருத்துக்களை, சீனா ஒதுக்கக் கூடாது. இது தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும்’ என, அவர் கூறியிருந்தார்.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹூவா சுன்யிங் கூறியதாவது:இந்தியாவின் கவலையை புரிந்துள்ளோம். எந்த கருத்து வேறுபாடுகளுக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும் என சீனா நம்புகிறது.
இந்தியா – சீனா இடையே உள்ள, நல்ல உறவை தொடரும் வகையில், இந்தப் பிரச்னையில் இந்தியாவுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.