Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தம்..!

January 28, 2018
in News, Politics, World
0

தமிழகம் – கேரள அரசுகளுக்கு இடையே உருவான பரம்பிகுளம் – ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படாமல் 30 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. அந்த திட்டத்தில் கேரளாவுக்கு கூடுதல் நீர் கிடைக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடக்கும் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தமிழக எல்லையில் மேற்கு நோக்கி மலைப்பகுதியில் செல்லுகின்ற ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம் மற்றும் தூணக்கடவு மற்றும் சமவெளிப்பகுதியில் ஓடுகின்ற ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1955-1960) பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே, 29.05.1970 அன்று மேற்குறிப்பிட்டுள்ள நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் இதர உபயோகங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு 09.11.1958 முதல் முன் தேதியிட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் ஆகிய தாலுகாக்கள் பயனடைகின்றன. கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களும் பயனடைகின்றன. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன்படி, 09.11.1988 அன்று மறு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு மாநிலங்களும் இந்த ஒப்பந்த மறு ஆய்விற்கான ஆவணங்களை 21.09.1989 அன்று பரிமாற்றம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் மறுஆய்வு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில், 10.06.2002 அன்று கேரள – தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முதற்கட்டமாக இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை கண்டறியும் பொருட்டு, பொறியாளர்களை கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது, இம்முடிவின்படி ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் குழு, தனது அறிக்கையினை மே, 2003 ஆம் ஆண்டு அளித்தது. இதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாநிலக் கூட்டங்களில் இவ்வறிக்கை விவாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் 21.01.2011 அன்று தலைமைச் செயலாளர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் இனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது, ஆனைமலையாற்றில் இருந்து பரம்பிக்குளம்- ஆழியாறு திடத்துக்கு 2.5 டிஎம்சி அடி நீரை திருப்புவதற்கு ஒப்பந்தபடி உரிமை உண்டு. இத்திட்டத்திற்கு ஒரு துணை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இடமலையாறு திட்டம் முடிவு பெறவில்லை என கேரள அரசு தொடர்ந்து கூறி வருவதால், இந்த நீரை திருப்ப முடியவில்லை. கேரள அரசு இத்திட்டத்தினை தானே செயல்படுத்த விரும்புவதாகக் கூறி, ஆனைமலையாற்றின் குறுக்கே இட்டலியாறு ஆனைமலையாற்றில் சேரும் இடத்திற்குக் கீழ்ப்பகுதியில் அணைகட்டி கீழ் நீராறு அணைக்கு 2.5 டி.எம்.சி அடி நீரை திருப்பவும் மற்றும் எஞ்சிய நீர்வரத்தை மணலியாற்றிற்கு திருப்பி, 100 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் கூடிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை 18.06.2013 அன்று தமிழ்நாட்டிற்கு அனுப்பியது. மேலும், சில அவசியமான தகவல்கள் கேரள அரசிடமிருந்து பெறப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கேரளாவிற்கு நீர் செல்வதை முறைப்படுத்த தற்பொழுது உள்ள மணக்கடவு அணைக்கட்டின் மேல் பகுதியில் 0.50 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட ஒரு சமச்சீர் நீர்த்தேக்கம் அமைக்கும் தமிழ்நாட்டின் திட்டத்தினை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இத்திட்டத்திற்கு கேரள அரசு இசைவு அளித்தால்தான் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டு ஒன்றிற்கு 7.25 டி.எம்.சி அடிக்கும் கூடுதலான நீரை மணக்கடவிலிருந்து கேரளாவிற்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்க இயலும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

நல்லாற்றின் குறுக்கே 7 டி.எம்.சி அடி நீரை தேக்கி வைக்க ஒரு நீர்த்தேக்கம் கட்டவும் மற்றும் மேல் நீராறு சிற்றணையிலிருந்து நேரடியாக சுரங்க வழியாக நீரை நல்லாற்றுக்கு திருப்பவும், 35 மெகாவாட் மற்றும் 230 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்யவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தமிழக அரசு நீராறு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சமமட்ட கால்வாய் மூலம் சுற்றுப் பாதையில் நீரை கொண்டு செல்வதையும் அதன் வாயிலாக ஏற்படும் நீர் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு நீராறு – நல்லாறு நேர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இத்திட்டம், தற்போதுள்ள மேல் நீராறு சிற்றணையிலிருந்து சோலையாறு அணைக்கும் பின்பு பரம்பிக்குளம் அணை மற்றும் திருமூர்த்தி அணை சுற்றுவழிப்பாதைக்கு மாற்றுப் பாதையாக அமைய உள்ளது ஆகும். இதனால், 85 கி.மீ தொலைவு பாதை 20 கி.மீ ஆக குறைந்து விடும். இத்திட்டத்திற்காக கேரள அரசின் ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் ஒரு புதிய திட்டம் என்பதால் ஒப்பந்த மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்து, கேரள அரசு இதுவரை இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், ஒப்பந்த மறு ஆய்வுக் கூட்டம் 28.04.2013 அன்று இரு மாநில அமைச்சர்கள் நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து மீண்டும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு, பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தின் மறு ஆய்வினை இறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் (ஜனவரி 24 ஆம் தேதி) முதல்வர் பினராயி விஜயன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ”பழையான இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கு 1988 ஆம் ஆண்டில் இருந்து கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், விதிமுறைகள் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு எட்டப்படாததால் அது நிறைவேற்றப்படவில்லை. பரம்பிகுளம் – ஆழியாறு திட்டத்தில் அதிக பங்கு நீரை பெறும் நோக்கில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். இந்த திட்டம் தொடர்பாக சென்னையில் அடுத்தமாதம், அதாவது பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் செயலாளர் மட்டத்திலான கூட்டத்திலும் இதற்கு முன்னுரிமை கொடுப்போம்” என்றார்.

தமிழகம் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது..!

Previous Post

மகாராஷ்ட்ராவில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து!

Next Post

தலைமை செயலர் பதவி:மூத்த அதிகாரிகள் போட்டி

Next Post

தலைமை செயலர் பதவி:மூத்த அதிகாரிகள் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures