Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும்

January 28, 2018
in News, Politics
0

இந்தியா மற்றும்சர்வதேசத்தின் அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய குடியரசு தின விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

இந்தியா சுதந்திரமடைந்த போது பல்வேறு சிற்றரசுகளாகச் சிதறிக்கிடந்த இந்தியா சுதந்திரத்தின் பின் இரும்பு மனிதர் ஸ்ரீ வல்லபாய் பட்டேல் அவர்களின் ஆளுமையின் காரணமாக பாரத நாடாக ஒன்றிணைக்கப்பட்டது. என் நினைவுக்கெட்டிய வரையில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலின் கனவு அக்கால இலங்கையைக்கூட உள்ளடக்கியது. அதனால்த்தான் போலும் இலங்கை சுதந்திரமடைந்த மறு வருடமே பத்து இலட்சம் இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பல்வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் கொண்ட வேறுபட்ட சமூகங்கள் இந்தியர் என்ற ஒரு பொது அடையாளத்தின் கீழ் அப்போது ஒன்றிணைந்தார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நோக்கில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டு பலமான ஒரு கூட்டு அரசை உருவாக்கும் பணியில் வெற்றியும் கண்டார்கள். பன்மொழி பேசும் நாடு பாரத நாடாக உருவெடுத்தது.

பாரதநாடு என்ற ஒரு வறுமையான தேசம் பசுமைப் புரட்சி மூலம் உணவில் தன்னிறைவு கண்டது. இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, வளர்ந்த நாடுகளுடன் போட்டா போட்டி போடக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டது. விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, ஏவுகணைப் பரிசோதனை மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பாரிய வளர்ச்சி பெற்று உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு வல்லரசாக இந்திய நாடு இன்று மிளிர்வதை நாம் காண்கின்றோம். சுமார் 400 மொழிகளுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்ற மக்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்திய நாடு மொழி மூல ஆக்கிரமிப்புக்கு இடம்கொடுக்காத வகையில் இதுவரை நடந்து கொண்டுள்ளது.

அங்கு வாழ்கின்ற அனைத்து இன மக்களையும் ஆங்கிலம் என்ற பொது மொழி இணைக்கின்ற போதும் தத்தமது பிரதேசங்களில் தமது தாய்மொழிப் பாவிப்பைக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா அத்துடன் இதுவரையில் ஒரு சமயச் சார்பற்ற நாடாகவே திகழ்ந்து வருகின்றது. அதனால் பல்சமூக, பல்லின, பல்சமய மக்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைக்க முன்னிற்கின்றார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்களம் என்ற இரு மொழிகளைப் பேசுகின்ற மக்களே பிரதான குடிகளாக வசிக்கின்ற போதும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் ஒரு சமூகமாகவே இதுவரையில் இயங்கி வந்துள்ளது. அடக்குமுறைக்கு அடிபணியாத தமிழ் இளைஞர் அணி வெகுண்டெழுந்ததன் விளைவாக இந்த நாட்டில் ஏற்பட்ட துன்ப துயர நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே. எமது மக்கள் பேரினவாத அணியினரால் துரத்தியடிக்கப்பட்ட போது எமது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்தியா.

இந்த நாட்டிலே தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்குச் சமமான உரித்துக்களைக் கொண்ட ஒரு சமூகமாக வாழ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வந்த இந்திய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்றென்றும் எம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இணைந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பேசும் மக்களுக்குரிய அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட போதும் சிங்கள மக்களையும் சமாதானம் செய்யும் நோக்கில் மாகாண சபை அரசியல் அமைப்பு முறையானது அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தமிழர்களுக்கு நாம் பிரத்தியேகமாக எதனையும் வழங்கவில்லை என்று சிங்கள மக்களுக்கு எடுத்துக்காட்ட அப்போதைய ஜனாதிபதி மேற்கொண்ட தந்திரோபாயமே அது.

அதே அடிப்படையில் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ;டி வழங்க இன்றைய எமது அரசாங்கம் முன்வர வேண்டும். எந்த இரு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணையவும் வழிவகுக்க வேண்டும். ஏனென்றால் என்ன நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டதோ அந்த விடயங்கள் அனைத்தும் உரு மறைப்புச் செய்யப்பட்டு தமிழ் மக்களுக்கு தரப்படவேண்டிய உரிமைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட ஒரு நிலையிலேயே நாம் இன்று இங்கு வாழ்கின்றோம். இருந்த உரித்துக்களையும் இழந்து ஏதிலிகளாக வாழுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் இங்கு தள்ளப்பட்டுள்ளோம்.

காரணம் முத்தரப்பு நிர்வாகங்கள் இங்கு நடந்துகொண்டிருக்கின்றது. ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோர் எமக்கு மேலதிகமாக மத்திய அரசின் அனுசரணையுடன் நிர்வாகம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு கையால் தருவது போன்று பாசாங்கு செய்து மறு கையால் இருப்பதையும் பிடுங்கி எடுக்கின்ற நடவடிக்கைகளே தொடர்ந்து இங்கு முன்னெடுக்கப்படுகின்றது. சகல மாகாணங்களுக்கும் சமஷ;டி அடிப்படையில் தீர்வு கிடைத்தால் வடகிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி மத்தியால் எமக்குப் பங்கம் விளைவிப்பதை நாம் தடுக்கலாம்.

குற்றாலத்தில் இடியிடித்தால் கோயம்புத்தூர் விளக்கு அணைவது போல ஒன்பது மாகாணங்களும் சமஷ;டி உரிமை பெற்றால் எமக்கு இழைக்கப்படும் அநீதிகள் இருப்பின் அவற்றிற்காகத் தெற்கத்தைய மாகாணங்கள் குரல் கொடுக்க முன்வருவன என்று எதிர்பார்க்கலாம். இன்று தெற்கிலுள்ள மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு எம்மைப்போல் அத்தியவசியமாகத் தேவைப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு மாகாணச் சுயாட்சி கிடைத்தால் அவர்களின் மனோநிலை மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐரோப்பியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த வளம் கொழித்த செல்வ பூமியாகக் காணப்பட்ட இலங்கைத் திருநாடு மொழி, மத மேலாதிக்கத்தின் விளைவாக இன்று பிற நாடுகளிடம் கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இன்றும் எமது பாதுகாப்புப் பற்றிய பாதீடு யுத்த காலத்துக்கும் அதிகமாக அமைந்துள்ளது.

இங்கிருக்கின்ற இளைஞர் சமூகங்கள் மிகுந்த அறிவாற்றலைக் கொண்டவர்கள். நாட்டின் முதுகெலும்பாகத் திகழவேண்டிய அவர்கள் இந்த நாட்டின் ஸ்திரத்தன்மையற்ற செயற்பாடுகளின் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் அரபு நாடுகளிலும் சிதறிக் கிடக்கின்றார்கள். இலங்கையில் இலவசக் கல்வி முறையின் கீழ் பெறப்பட்ட அறிவு ஆற்றல்கள் அந்நிய நாடுகளின் அல்லது மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவனவாகக் காணப்படுகின்றன.

அந்த நாடுகளில் தமிழர்களின் திறமையும் மற்றும் அவர்களின் ஸ்திரத்தன்மையும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் வேட்டி சட்டை அணிந்து தைப்பொங்கல் விழாவை தமிழ் மக்களுடன் இணைந்து கொண்டாடியமை எம் மக்களுக்கு அங்கு கொடுக்கப்பட்டுவரும் மரியாதையையும் அன்பையும் வெளிக்காட்டுகின்றது.
காலாதி காலமாக ஏமாற்றப்பட்டும் அடக்கி ஒடுக்கப்பட்டும் அடங்கி வாழவேண்டிய ஒரு சமூகமாக தமிழ் இன மக்கள் எம் நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள். எம்முட் சிலருக்கு தமது உண்மை நிலை என்ன என்பது கூடத் தெரியாது இருக்கின்றது. அண்டை நாடான இந்திய நாட்டினதும் சர்வதேசத்தினதும் அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என்பது எமது நம்பிக்கை.

மிகவிரைவில் எம்மைவிட்டு கௌரவ நடராஜன் அவர்கள் டெல்கி செல்ல இருப்பதாக அறிகின்றேன். டெல்கியில் எம்மவர், எமக்கு வேண்டியவர் இருக்கப்போவது எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் திரு.நடராஜன் அவர்களின் தமிழ்ப் பேச்சுக்களையும் முக மலர்ச்சியுடன் வரவேற்கும் அவரின் தமிழ்ப் பாங்கினையும் சில காலத்திற்குக் கேட்கவும் பார்க்கவும் முடியாதிருக்கும் என்பது மனவருத்தத்தைத் தருகின்றது.

சில காலத்திற்கு என்று கூறுவது அவர் உயர் பதவிகள் பெற்று விரைவில் எமது இந்திய தூதரகத்திற்கு இந்தியாவின் தூதராக வரவேண்டும் என்பதே எமது விருப்பம். எனவே இந்த நல்லதொரு தினத்தில் இந்திய அரசும் இந்திய மக்களும் தமது குடியரசுத்தினத்தை விமரிசையாகக் கொண்டாட எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ;டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுகளை நாம் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.

Previous Post

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – சுமதிபால நேரில் ஆராய்வு

Next Post

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Next Post

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures