மூன்று குற்றத் தடுப்பப் பிரிவினர், மூன்று பிராந்தியக் காவற்படையினர் என ஆறு காவற்துறையினர், பொண்டியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் நிலக்கீழ் அறையினைச் சோதனையிடச் சென்றுள்ளனர்.
அந்த நிலக்கீழ் அறைகளில், போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக, இந்தப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அங்கு காவற்துறையினர் சென்றுள்ளனர்.
அந்தச் சமயத்தில் போதைப் பொருள் விற்பவர்கள் அந்த நிலக்கீழ் அறையில் நின்றிருந்துள்ளனர். வெளியே காவற்துறையினர் வந்த சத்தம் அவர்களிற்குக் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளியெ படிகளில் ஓடத் தொடங்கி உள்ளனர்.
காவற்துறையினர் இவர்கள் ஓடுவதைக் கண்டுவிட்டு, அவர்களைப் பிடிப்பதற்காக வெளியே செல்லும் மாடிப்படிக்கட்டை நோக்கிச் சென்ற பொழுது, அங்கு நின்ற ஐந்துபேர்;, நிலத்தில் நடைபாதைக்காகப் பதித்து இருந்த பெரும் சீமெந்து கல்லைத் தூக்கி காவற்துறையினர் மீது எறிந்துள்ளனர். தொடர்ச்சியாக இவர்கள் மீது தாக்குதல் நடைபெற, அங்கிருந்த ஒரு கதவைத் திறந்து அதற்குள் காவற்துறையினர் தஞ்சமடைந்துள்ளனர்.
காவற்துறையினர் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பி உள்ளனர். எறியப்பட்ட பாரிய கொங்றீட் துண்டம் தாக்கியிருந்தால் காவற்துறையினர் கொல்லப்பட்டிருப்பார்கள். இவர்களின் உதவிக்கு வந்த மேலதிகப் படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னர், இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.