தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐநாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் சயீத் அக்பருதீன் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் நேற்று உரையாற்றியதாவது: ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றை திரும்ப கொண்டு வர பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது.
இந்த மனநிலையில்தான், பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டித்தரப்பட்ட நாடாளுமன்ற கட்டிட துவக்க விழாவில் பங்கேற்க சென்றார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவேண்டும் என்பதற்கு ஆதரவான கோஷம் மட்டும் போதுமானதல்ல.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எல்லை தாண்டி நடக்கும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. இவர்கள் மீதான தன் மனநிலையை பாகிஸ்தான் மாற்றி கொள்ள வேண்டும்.
அந்த நாடு தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக உள்ள நிலையை மாற்ற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சயீத் அக்பரூதின் பேசினார்.