கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடமளிக்கப்பட்டிருந்தபோதும் இவ்வருடம் முதல் அப்பொறுப்பை தாம் கையேற்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் தேசிய பொருளாதார சபையை அமைத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து மக்களுக்கு நிவராணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
நேற்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய கைத்தொழில், தேசிய உற்பத்தி மற்றும் தேசிய முதலீடு அனைத்தையும் பாதுகாத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை விட்டுச் செல்லாது தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுமாறு அனைத்து தேசிய கைத்தொழில்த்துறை சார்ந்தவர்களிடமும் முதலீட்டாளர்களிடமும் தான் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து சமயத் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் நாட்டின் அனைத்து மக்களையும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்து இந்த நாட்டை ஊழல் மோசடி இல்லாத உலகின் உன்னத தேசமாக கட்டியெழுப்பும் பயணத்தை இந்த தேர்தல் வெற்றியுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.