கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யத்தூதரகத்திற்கு அருகாமையில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடியபோது பந்து தூதரகத்திற்குள் விழுந்ததையடுத்து ரஷ்யத்தூதரக அதிகாரியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இத்தாக்குதல் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்களினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்யத்தூதரக அதிகாரிகள் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.ஜே. அபொன்சோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி வெளிவிவகார அமைச்சுக்கும் அறியத்தரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச்சம்பவம் தொடர்பில் விசாரணைமேற்கொண்ட பொலிஸார் இளைஞர்களை எச்சரித்துள்ள போதிலும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள், அப்பகுதியிலுள்ள சட்டவிரோத குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு பலதடவைகள் முனைந்தபோதும் அது கைகூடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.