“கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“கிளிநொச்சி – இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசு விடுவிப்பதற்குத் தயாராகவில்லை. அதைவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளபோதும், அதில் பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்குப் படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணிகூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும்” – என்றார்.