சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், இன்று முதல் (ஜன.,1, 2018), 5 சதவீத, ‘வாட்’ வரி அமலாகியுள்ளது. இவை, கச்சா எண்ணெய் வாயிலான, அபரிமிதமான வருவாய் காரணமாக, வரியில்லா வளைகுடா நாடுகள் என்ற சிறப்புடன் திகழ்ந்து வந்தன.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக நீடிக்கும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தையும் சமாளிக்க, ‘வாட்’ எனப்படும், மதிப்பு கூட்டு வரி விதிக்க முடிவு செய்தது. இதன்படி, இன்று (2018 ஜன., 1) முதல், உணவு, உடை, மின்னணு சாதனங்கள், குடிநீர், ஓட்டல் அறை உள்ளிட்டவற்றுக்கு, 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இத்துடன், வீட்டு வாடகை, மின்சாரம், உயர் கல்வி கட்டணம் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு, 1,200 கோடி திரம், அதாவது, 330 கோடி டாலர் வருவாய் கிடைக்கும். அதே சமயம், மக்களின் ஊதியம் நிலையாகவும், ஆனால், வாழ்க்கைச் செலவினம், 2.5 சதவீதம் உயரும் எனவும், மதிப்பிடப்பட்டு உள்ளது.