ஆழிப்பேரலையால் நிர்க்கதியான மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் இதுவரை மக்களுக்கு கையளிக்கப்படவில்லை.
அவ்வாறு அமைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள் இன்று பாழடைந்து காணப்படுகின்றன.
சுனாமி பேரலையால் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் முதல் நீலாவணை வரையான பிரதேசங்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த கோர அனர்த்தத்தில் 38,000 குடும்பங்கள் பரம்பரையாக வாழ்ந்த வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிர்க்கதியானதுடன் 8,600 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
2005 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவினால், நுரைச்சோலையில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்,
சகல வசதிகளையும் கொண்டதாக 500 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன.
வீடுகளை இழந்த மக்களுக்கு இந்த வீடுகளைக் கையளிப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வீடுகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கு மாத்திரம் வழங்கப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மூன்று இனத்தாருக்கும் விகிதாசார ரீதியாக பகிர்ந்தளிக்கும்படி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றைக்கு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் வீடுகள் கையளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதியில் தற்போது காடுகள் மண்டிக் கிடப்பதுடன், வீடுகள் கதவு மற்றும் ஜன்னல்கள் கழற்றப்பட்டு கவனிப்பாரின்றி காட்சியளிக்கின்றன.