Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெஞ்சை விட்டகலாத ஆழிப் பேரலை

December 24, 2017
in News, Politics
0

2004-.12-.26ஆம் திகதி காலை 8.10 இற்கு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்குண்டு அன்று அனுபவித்தறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் (26-.12-.2017) நிறைவடையும் ஆழிப் பேரலையின் 13ஆது ஆண்டு நிறைவையொட்டி அன்று நான் அனுபவித்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
அன்று ஊமையாய் உறங்கிக் கிடந்தது உறுமும் வங்காள விரிகுடாக் கடல். அடிவானம் சிவக்க ஆரவாரமின்றி அமைதியாய் பிரசவமானது சூரியன். மெல்லிய காற்று என் மேனியை மெதுவாக வருடியது என் வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த அடித்தளத்தில் நான் அமர்ந்திருந்த போது,
இன்றைய (2004-.12-.26) நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைப் பற்றி என் மனதுக்குள் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது மூத்த மகள் ஹரீஷா வாப்பா நான் கெம்பியூட்டர் பாடத்திற்குப்போய் வருகின்றேன் என்றாள் கவனமாகச் சென்று வாருங்கள் என்று வழியனுப்பிவிட்டுத் திரும்பிய போது எனது இரண்டாவது மகள் ஷாயிரா வாப்பா நான் தென்கிழக்குப்பல்கலைக் கழக ஆங்கிலக் கற்கை நெறிவகுப்பிற்கு அட்டாளைச்சேனைக்குச் செல்கின்றேன் என்று சொன்னாள். அவளையும் வீதி வரை சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பினேன்.

அப்போது எனது இரட்டையர்கள் ஸீமா.ஸீபா, மகன் சஜீத் அஹமட் ஆகியோரும் நாங்கள் ரியூசனுக்குச் செல்கின்றோம் என்று சொல்லிவிட்டுச் சென்றனர். இறுதியாக வீட்டில் எஞ்சியது எனது மூன்றாவது மகள் றாயிஸாவும் எனது மனைவி ஹவ்லத்தும் தான். நான் எழுந்து குளித்துவிட்டு பத்திரிகை எடுப்பதற்காக செல்வதற்கு ஆயத்தமான போது வாசலில் சைக்கிள் மணி ஒலித்தது எட்டிப்பார்த்தேன் எனது ஊடக நண்பர் வலீத் நின்று கொண்டிருந்தார். வாருங்கள் வலீத் என்று அழைத்து எனது கொட்டில் வீட்டு குட்டி வராந்தாவில் அமரச் சொல்லிவிட்டு நானும் அமர்ந்து கொண்டேன்.
நேரம் 8.10 கடல் வருகுது கடல் வருகுது என்று உரத்த குரலில் கத்தும் சத்தம் கேட்டது வீதிக்கு சென்று எட்டிப் பார்த்தேன் அடுத்த வீதியில் குடியிருக்கின்ற பவுசியா கத்திக் கொண்டு எனது வீட்டு வீதியால் ஓடிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது கடல் வருவதா? ஒன்றுமே புரியவில்லை எனக்கு இருந்தாலும் என்னவென்று பார்ப்போம் என்று ெகமராவைக் கழுத்தில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.
எனது ஊடக நண்பரும் நானும் போகின்றேன் என்ற சொல்லி விட்டுச் சென்று விட்டார். எனது வீட்டில் இருந்து சுமார் ஐந்து மீட்டர் தூரத்தில் ஒரு நாலாஞ் சந்தியிருந்தது. அந்த சந்தியில் இருந்து பார்த்தால் கடல் நன்றாகத் தெரியும் அந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில்தான் கடல்வாயும் இருக்கின்றது. அதனால் கடலில் என்ன நடந்தாலும் நன்றாகத் தெரிவதற்குச் சந்தர்ப்பம் இருந்தது.
அவசர அவசரமாக ெகமராவைத் தயார் செய்து கொண்டு கடலை நோக்கினேன் அப்போது முதிர்ந்த தென்னை மரத்தின் உயரத்திற்கு பாரிய கடலலை எழுந்தது அழகாக அதைப் படம் பிடித்துக்கொண்டேன் ஆழிப் பேரலையின் ஆவேசம் எப்படியிருக்கும் என்பதை அறியாததால் இன்னும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னில் மேலோங்கியதால் மீண்டும் ெகமராவை உயர்த்தினேன் அப்போது என்னை அறியாமலேயே நான் நின்ற இடத்தில் இருந்தே ஆழிப் பேரலை என்னை சுருட்டிக் கொண்டது.
அப்போது வீட்டில் இருந்த எனது மனைவியையும்,மகளையும் பற்றிய சிந்தனை என்னில் மேலோங்கியது. அப்போது ஆழிப் பேரலையின் ஆக்ரோசம் என்னை உருட்டி, புரட்டி, சுருட்டி ஏதோ ஒன்றுக்குள் புகுத்தியதை உணர்ந்தேன்.
அப்போது நான் மரணிக்கப் போகின்றேன் என்பது உறுதியாகியது மீண்டும் ஒரு முறை எனது உடன்பிறப்புக்களையும் உறவுகளையும், நட்புக்களையும் நினைத்துக் கொண்டேன்.
அப்போது மீண்டும் பாரிய பேரலையொன்றின் மூலம் நீர் மட்டம் உயருவதை உணர முடிந்தது. அந்நேரம் ஏதோ ஒன்றுக்குள் புகுத்தப்பட்ட நான் மேலே வருவதாக உணர்ந்தேன் கண் விழித்த போது திரும்பும் திசையெல்லாம் கடலாகவே காட்சியளித்தது. எதையுமே காணவில்லை எழுந்து நிற்கவும் முடியவில்லை கையில் தட்டுப்பட்ட கட்டையொன்றின் மேல் கையை வைத்தப் பிடித்துக் கொண்டேன்.
என்னை அறியாமலேயே என் உணர்வுகள் நான் அணிந்திருந்த சாரனைத் தேடியது உடம்பில் கையை வைத்துப் பார்த்தேன் நான் அணிந்திருந்த சேட் மட்டும்தான் உடம்பில் இருந்தது சுற்றிப் பார்த்தேன் எனக்கு முன்னால் ஒரு கம்பொன்றில் எனது சாரன் தொங்கிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு அந்த சாரனை எடுத்து எனது இடுப்பில் கட்டிக் கொண்டேன். மெது மெதுவாக நீரில் நகர்ந்து சென்று ஒரு தென்னை மரத்தின் அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டு அந்த மரத்தில் ஏறிக்கொண்டேன்.
சுமார் 15 அடி உயரமான அந்த மரத்தில் இருந்து பார்த்த போது கடலும் ஊரும் ஒன்றாகவே காட்சியளித்தது. பலர் மரங்களிழும்,வீட்டுக் கூரைகளின் மேலும் அமர்ந்திருந்தனர். சிலர் சடலமாக நீரில் மிதந்தனர் கண்களை மூடிக்கொண்டேன். கவலை அதிகரித்தது எனது மனைவியும்,மக்களும் எங்கே போயிருப்பார்களோ என்ன நடந்திருக்குமோ என்ற பல்வெறு சிந்தனைகளுடன் தென்னை வட்டுக்குள் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு கண்ணை மூடி மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
எனக்கு அருகில் எனது பக்கத்து வீட்டுச் சிறுவனும் மரத்தில் அழுது கொண்டிருந்தான். மீண்டும் கண் திறந்து பார்த்தேன் நான் இருந்த தென்னை மரத்தில் இருந்து 5 மீட்டர் தூரத்தில் 5 வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தன மூன்றாவது முறையாக நீரில் மூழ்கிய குழந்தைகள் மேலே எழும்பவில்லை அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை என்னை வாட்டியது என்னை அறியாமலேயே எனது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கடல் நீரோடு சங்கமமாகியது.
ஆழிப்பேரலை என்னை உருட்டிப் புரட்டிச் சுருட்டியதால் உடம்பெங்கும் காயங்கள். இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கடல் நீரும் சிறுகச் சிறுக கடலுக்குள் சென்ற கொண்டிருந்தது. அழுகுரல் எல்லாத் திசைகளில் இருந்தும் ஒழித்துக் கொண்டிருந்தது. பலர் உறவுகளைத் தேடினார்கள் சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உறவுகளை விட்டுவிட்டு ஓடினார்கள் இவையெல்லாம் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த நிகழ்வாகியது.
இன்னும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை மரத்தை விட்டுக் கீழே இறங்கினேன்.கழுத்தளவுக்கு நீர் இருந்தது எங்கும் நகர முடியாதபடி கற் சுவர்களும், கட்டைகளும்,கம்பிகளும். உயிர் பிரிந்த உடல்களும் இடிபாடுகளாய் நிறைந்திருந்தன.மெதுவாக நகர்ந்தேன், என் கண்கள் என் மனைவியையும்,மகளையும் தேடியது அப்போது ஹரிஷாட வாப்பா நான் இன்னா இரிக்கேன் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப்பார்த்தேன் என் சகோதரரின் மனைவி குறைசியா வீடொன்றின் கூரைமீது அமர்ந்திருந்தார். அவரையும் கீழே இறக்கிக் கொண்டு இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு நீர் புகாத பிரதேசத்திற்கு அனுப்பிவைத்தேன்.
என் கண்கள் அழிந்த பிரதேசத்தை நோக்கியது அப்போது மகள் றாயிஸா தோடை மரம் ஒன்றில் நிற்பதைக் கண்டேன் எனது உறவினர் ஒருவரின் உதவியுடன் அவளை கீழே இறக்கிக் கொண்டு திரும்பிய பொது எனது மனைவியும், எனது மதினியின் பிள்ளைகளும் வீட்டுக் கூரையொன்றின் மேல் இருப்பதைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன். அவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதான வீதியை சென்றடைந்தேன்.
அங்கு ஒருவர் சொன்னார் உங்கள் பிள்ளைகள் மக்கள் மண்டபத்தடியில் நிற்கிறார்கள் என்று சந்தோசத்துடன் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த பொது மூத்த மகள் ஹரிஷாவும் மகன் சஜீத் அஹமட்டும் தான் நின்றார்கள்.இரண்டாவது மகளையும் இரட்டைகளையும் காணவில்லை மீண்டும் என்னில் துயரம் தொற்றிக் கொண்டது அப்போது ஒருவர் என்னருகில் வந்து உங்கள் இரட்டைகள் உங்கள் மதினியோட வாகனத்தில் அம்பாரைக்குச் சென்று விட்டார்கள் என்று சொன்னார்.
மனம் ஆறுதலடைந்தாலும் இரண்டாவது மகளைப்பற்றிய சிந்தனை அதிகரித்தது நேரம் பிற்பகல் 2.00 மணி அப்போது ஒருவர் வந்து சொன்னார் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது உங்கள் மகள் ஏறாவூரில் உங்கள் உறவினரின் வீட்டில் இருக்கின்றாறாம் என்று அவரிம் வந்த தொலை பேசி இலக்கத்துடன் தொர்பு கொண்டு மகளின் இருப்பை உறுதிசெய்து கொண்டேன்.
மகள் அட்டாளைச்சேனைக்கு ஏறாவூர் பஸ் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்சில் செல்லும் போது ஆழிப்பேரலை அல்லோல கல்லோலத்தில் சாரதி காரைதீவுச் சந்தியால் பஸ்சைத் திருப்பி அம்பாரைக்குச் சென்று பதியத்தலாவை வழியாக ஏறாவூரைச் சென்றடைந்திருக்கின்றார். அங்கு நடாத்துனர் எனது உறவினர்களிடம் மகளை ஒப்படைத்திருக்கின்றார் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. சிலவாரங்களுக்குப் பின் நானும் எனது மைத்துனர் அஜ்மீரும் ஏறாவூருக்குச் சென்று மகளை அழைத்து வந்தோம். எனது குடும்பம் ஒன்று கூடியது இறைவன் எங்களை ஒன்று சேர்த்தான்
என்னிடம் இருந்த ஊடக உபகரணங்கள் உள்ளீட்ட எல்லாவற்றையும் அழிப்பேரலை அள்ளிச்சென்றது எல்லாவற்றையும் இழந்த போதிலும் மனதைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நான் இழக்கவில்லை. ஆழிப்பேரலையில் அகப்படாத நெருக்கமான நண்பர்கள் சிலர் தூரமானார்கள் ஆனாலும் நெருக்கமில்லாத பலர் உதவினார்கள் அந்த உதவிகளுடாக என்னை நான் ஆறுதல்படுத்திக்கொண்டேன்.
இந்த அனர்த்தத்தில் மனைவியையும்,பிள்ளைகளையும் விட்டுவிட்டு ஓடிய கணவன்மார்களும்,கணவனும் பிள்ளைகளும் வந்தால் போதும் என்று அழுதழுது,ஆழிப் பேரலையில் அள்ளுண்டு போன மனைவிமாரும், தங்கள் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக வெளியிலேயே வராமல் உயிர் துறந்த இளம் பெண்கள் இவற்றுக்கு மத்தியில் இதுதான் சந்தர்ப்பம் என்று நகைகளையும்,பணங்களையும், பொருட்களையும் தேடித்திரிந்து சேகரித்த மற்றுமொரு குழுவினர் யார் எப்படிப் போனாலும் பரவாயில்லை நாம் தப்பித்துக் கொள்வோம் என்று ஊரைவிட்டே ஓடியது மற்றும் ஒருதரப்பு.
இவற்றுக்கு மத்தியில் ஆழிப்பேரலையில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற ஓடித்திரிந்த ஆழிப்பேரலையில் சிக்காத பிரிவினர் இங்குதான் மனித நேயத்தையும்,மனிதப் பண்புகளையும் இனங்காண முடிந்தது.இன மத பேதங்களுக்கு அப்பால் பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். ஆழிப்பேரலையின் அழிவுகளை வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது. உலகில் இப்படியொரு அனர்த்தம் இனிமேலும் வரக்கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும்.

Previous Post

47 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும், தொகுதிவாரித் தேர்தல்

Next Post

ஜனவரியில் தீவிர பிரச்சாரம் ஆரம்பம்

Next Post

ஜனவரியில் தீவிர பிரச்சாரம் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures