இந்தியாவின் ஆளில்லா விமானமான, ‘ட்ரோன்’ சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதற்கான விளைவை, இந்தியா சந்திக்க நேரிடும்’ என, சீனா எச்சரித்துள்ளது.
நம் ராணுவத்தின், ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா விமானம், அண்டை நாடான, சீனாவின் எல்லைக்குள் சென்றது.அந்த விமானம், அத்துமீறி எல்லைத் தாண்டி வந்ததாக, சீனா குற்றஞ்சாட்டியது. ‘பயிற்சியின் போது, ட்ரோன் தவறுதலாக, சீன எல்லைக்குள் நுழைந்துவிட்டது. இந்தத் தகவலை, சீனாவுக்கே நாங்கள் தான் தெரிவித்தோம்’ என, நம் ராணுவம் கூறியது.
இந்நிலையில், சீன அரசின் பத்திரிகையான, ‘குளோபல் டைம்ஸ்’ நேற்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியா – சீன எல்லையில் உள்ள, டோக்லாம் பகுதியில், சமீபத்தில், இரு படைகளுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னை, பேச்சு மூலம் சுமுகமாக முடிவுக்கு வந்தது. தற்போது, இந்தியாவின் ட்ரோன், அதே டோக்லாம் பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது; இது, சீனாவைத் துாண்டும் வகையில் உள்ளது.
இந்தியா, தன் தவறை உணர்ந்து, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால், அதற்கான விளைவை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.