இலங்கையில் 6300 ஆண்டுகள் பழைமையான இரத்தக் கறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலங்கொடை, இலக்கும்புர மற்றும் பத்தான கிராம பிரதேசத்தின் கற்குகைக்குள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது மிக பழைமையான இரத்தக் கறை படிந்த கல் ஒன்று தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
லுனுகல்கே என அழைக்கப்படும் இந்த கற் குகையினை 2015ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதாஸ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது இந்த இரத்தக் கறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் இவ்வாறான பழைமையான மனித இரத்தக் கறை தொடர்பில் ஆயிரத்திற்கும் குறைவானவையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதி மனிதன் தொடர்பிலான வரலாற்றினை கண்டுபிடிப்பதற்கு இவ்வாறான சாட்சிகள் மிக முக்கியமானவைகள் என கூறப்படுகின்றது.
6300 ஆண்டுகளை விடவும் பழைமையான இந்த இரத்தக் கறை தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இது ராகம வைத்திய பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“எங்களுக்கு இந்த இரத்த கறை 2015ஆம் ஆண்டு கிடைத்தது. இது வரலாற்றுக்கு முந்தைய யுகத்திற்கு சொந்தமானதாகும். இரத்தக் கறை படிந்திருந்த கல் முன்னதாக பொரளையிலுள்ள ஆய்வு நிலையம் ஊடாக ஆய்வு செய்யப்பட்டது. அங்கு இது மனித இரத்தத்திற்கு சொந்தமானதெ கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரத்தக் கறை கி.மு 4300 – 3900 ஆண்டு காலப்பகுதிகளுக்கு சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கமைய இதன் பயன்பாட்டு ஆண்டிற்கமைய 6300 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டவை என தெரியவந்துள்ளதென பேராசிரியர் ராஜ் சோமதாஸ தெரிவித்துள்ளார்.