வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஒன்றினைந்து குளிப்பதற்காக குளக்கரைக்குச் சென்றுள்ளனர்.
குளக்கரை ஓரத்திலிருந்து குறித்த நால்வரும் தண்ணீர் தட்டி விளையாடிக் கொண்டிருந்த போது திருமணமாகி இரண்டு மாதங்களேயான 26 வயதுடைய ஜெயபிரதாப் என்ற இளைஞனும் எதிர் வரும் 2018ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய பாணுரேகா என்ற மாணவியும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் கத்தி கூச்சலிட்டு அயலவரின் உதவியை நாடி நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் மாமடுவ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளனர்.
பின்னர் உயிரிழந்த இருவரினதும் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.