சட்டத்திற்கு முரணாக அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்காக கட்டிடத்தை கட்டியவரிடமிருந்து செலவுகளை அறவிடுமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (23) நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கு உத்தரவிட்டார்.
திருகோணமலை,என்.சீ.வீதி இலக்கம் 159 இல் எச்.எஸ்.அன்ஷார் என்பவர் சட்டத்திற்கு முரணாக கட்டிடமொன்றினை கட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு விசாரணை நேற்று (23) திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்பினை வழங்கியுள்ளார்.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான எச்.எஸ்.அன்ஷாருக்கு நீதிமன்றத்தில் காரணம் காட்டுவதற்காக சந்தர்ப்பம் கொடுத்து வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு கட்டளையாக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட விடயம் கட்டப்பட்ட கட்டிடமானது அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு பிரதிவாதியின் கடமை என்றும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த வழக்கில் தீர்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த வழக்கின் பிரதிவாதியான எச்,எஸ்.அன்ஷார் என்பவருக்கு நீதிமன்றத்தில் தோன்றி தன்பக்க காரணங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தும் குறித்த கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டது என்பதை எண்பிக்க தவறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.