காலி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகளுக்கு பலப்பிட்டியில் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹிக்கடுவ தேசிய வனப் பூங்கா பொறுப்பாளர் ஏ.வீ. கசுன் தரங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஈரமான பகுதிகளில் வாழும் முதலைகள் மிகவும் கடும் சுபாவம் கொண்டதாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாதுகங்கை, கொக்கல குளம், நில்வலா கங்கை, பொல்அத்து மோதர கங்கை போன்ற நீர் நிலைகளில் முதலைகளின் செயற்பாடு அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் போன்ற காரணங்களினால் இந்த முதலைகள் கிராமங்களுக்குள்ளும் பிரவேசித்துள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக பலப்பிட்டி, கரிஜ்ஜபிடியவிலுள்ள நிலப்பரப்பில் முதலைப் பூங்கா ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.