ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையான ஆதரவை வழங்குமென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் Wencai Zhang தெரிவித்தார்.
2018 – 2022 காலப்பகுதியின் அபிவிருத்தி உதவிக்கான நாட்டின் பங்கேற்பு மூலோபாயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார். இக்காலப்பகுதிக்கான உதிவியாக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான தொகையை ஒதுக்கியுள்ளது.
இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50 வருட கூட்டுறவை நினைவுகூரும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Wencai Zhang 50 வருட பங்குடைமை தொடர்பான நூலின் பிரதியொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மூலதனச் சந்தை அபிவிருத்தியைத் துரிதப்படுத்த வேண்டியதன் தேவையை Wencai Zhang வலியுறுத்தினார். இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான வழங்கள் பொறிமுறையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியளிக்கும் எனத் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள வறுமை ஒழிப்பு மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கம் தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன், இந்த முன்னெடுப்புகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அதிக வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று தெரிவித்த அவர், பொருளாதார அபிவிருத்தி வலயங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றம் தெரிவித்தார்.
கடந்த 50 வருடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி 09 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதையிட்டு ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Sri Widowati தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரகோன், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி சரத் ராஜபத்திரன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.