ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக, ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று காலை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
ஆசிரிய கலாசாலை முன்னுள்ள ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் காலை 8 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் உதவியாளர்களை உடனே 3 – II இற்கு உள்வாங்கு, பயிலுநர் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்காதே, அமைச்சர்கள் நாட்டில் ஆசிரியர்கள் ரோட்டில் போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கறுப்பு பட்டி அணிந்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் இடம் பெற்றதுடன் 500 மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் உதவியாளர்கள் 2014.08.08 வர்த்தமானிக்கமைய 2015.05.19 ம் திகதி ஆசிரியர் உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டு இவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டுவந்தன.
அதனை தொடர்ந்து ஆறு மாதங்களின் பின் இவர்களுக்கு மேலும் 4000 ரூபா அதிகரிக்கப்பட்டு சுமார் 10000ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்த பத்தாயிரம் ரூபா கொடுப்பனவிலேயே இவர்களின் கடமைக்கான போக்குவரத்து செலவு ,உடுதுனி, குடும்பச் செலவு, வைத்திய செலவு உட்பட இதர அனைத்து செலவுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
எனவே இந்த விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்களும், இவ்வாசிரியர்களும் தமக்குள்ள இடர்பாடுகளை முன்வைத்து தம்மை நிரந்தரமாக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் கோரிக்கை முன் வைத்த போதிலும் அவர்கள் இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க தவறிவிட்டனர்.
அத்தோடு இந்த ஆசிரியர் நியமனங்களுடன் வழங்கப்பட்ட ஒரு சில ஆசிரிய உதவியாளர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலினை மாற்றி நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமக்கு மாத்திரம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல தடவைகள் அரசியல்வாதிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை அது நடைபெறாமை காரணமாகவே இவர்கள் போராட்டத்திற்கு குதித்துள்ளமை குறிப்பிடதக்கது.
இவ்வார்ப்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கலந்து கொண்டார்.