கிந்தொட்ட பிரதேசத்தில் கலவரம் ஒன்று ஏற்பட்டது என்பதற்கு சமூகத்தில் இயங்குகின்ற சிங்கள-முஸ்லிம் அமைப்புக்கள் அனைத்தும் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும், அவ்வாறான அமைப்புக்கள் சகலவற்றினதும் தோல்வியையே இக்கலவரம் எடுத்துக் காட்டுவதாகவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
காலியில் இடம்பெற்ற சமூக அமைப்புக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கிந்தொட்ட நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைக் கூறினார்.
இந்த தோல்வியில் பொலிஸார், எஸ்.ரி.எப்., கிராம சேவைப் பிரிவுகள், பொலிஸ் ஆலோசனைக் குழு, சமயத் தலைவர்கள் உட்பட பல அமைப்புக்களும் உள்ளடங்குகின்றனர். உண்மையை நாம் மறைக்காமல் கூறுவோம்.
இந்த தோல்வியின் பின்னால் நாம் அடைந்த இழப்புக்கள் கிந்தொட்டயில் அதிகம். கிந்தொட்ட கலவரத்தில் 74 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. முச்சக்கரவண்டிகள் ஆறு சேதமாக்கப்பட்டுள்ளன. 16 கடைகள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. லொறியொன்று எரிக்கப்பட்டுள்ளது. வேன் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவங்கள் எட்டு பதிவாகியுள்ளன. வெட்டுக் குத்துக் காயங்கள் இடம்பெற்றுள்ளன. உயிராபத்துக்கள் மாத்திரமே இடம்பெறவில்லை. மொத்தமாக 116 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவை அனைத்தும் மனித நேயமற்ற மூர்க்கத்தனத்தின் விளைவுகளேயாகும் என்று கூற வேண்டியுள்ளது எனவும் பொலிஸ் மா அதிபர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.